Single Post

  தொல்காப்பியம் என்னும் தலைசிறந்த இலக்கண நூல், தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூலாகும். காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட கருவூலமாகும். ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர். இவர், பெரும் அறிவாற்றலையும் புலமையையும் பெற்றவர். பண்டைய இலக்கண நூல்களைக் கற்றுத் தெளிந்து, நன்கு ஆராய்ந்தவர். தமிழ் மொழியின் எழுத்தின் இலக்கணத்தில் தொடங்கி, சொல்லில் தொடர்ந்து தமிழரின் வாழ்க்கை முறைகளையும் நெறிகளையும் விளக்கி, யாப்பு, செய்யுள் அமைப்பது வரை கூறியுள்ளார். தமிழில் இன்றுவரை எழுதப்பெற்றுள்ள அனைத்து இலக்கண நூல்களுக்கும் தொல்காப்பியமே அடிப்படை. உலகில் வேறு எந்த மொழிகளின் இலக்கண நூல்களுக்கும் இல்லாத தனித்தன்மை தொல்காப்பியத்திற்கு உள்ளது. இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய உரையாசிரியர்கள் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியுள்ளனர். தொல்காப்பியம், எழுத்ததிகாரம் (483 நூற்பாக்கள்); சொல்லதிகாரம் (463 நூற்பாக்கள்); பொருளதிகாரம் (664 நூற்பாக்கள்) ஆகிய மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்கள் என 27 இயல்களில் 1610 நூற்பாக்களைக் கொண்டது. தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891-இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் பிள்ளையைச் சாரும். சி.வை.தாமோதரம் தொல்காப்பியக் காலத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ்பெருமொழி நன்கு வளர்ந்து, பண்பட்டு, இலக்கணத்திலும் இலக்கியத்திலும் வளர்ந்து, செழித்து, விளங்கியிருந்தது என்பதையும், தமிழர்கள் அக்காலத்திலேயே உயர்ந்த வளத்தின், மரபுகளின், நாகரிகத்தின். கல்வியின். கலைகளின், தொழில்நுட்பத்தின், வணிகத்தின் உச்சத்தில் வாழ்ந்திருந்தனர் என்பதைத் தொல்காப்பியர் 287 இடங்களில், நூற்பாக்களில் உள்ள கருத்தைத் தாமாகக் கூறவில்லை என்றும், தமக்கு முன்னால் வாழ்ந்த பெரும் புலவர்கள், நன்கு கல்வி கற்ற அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள் என்றும் கூறுகின்றார். 1963-இல் பேரறிஞர் அண்ணா. தொல்காப்பியத்தின் ஆங்கில மொழியாக்கத்தின் முன்னுரையில், தனக்கே உரிய எழிலார்ந்த நடையில் தொல்காப்பியத்தைப் பற்றி அவர் குறித்த வரிகளும் முத்தமிழறிஞர் கலைஞர் படைத்த தொல்காப்பியப் பூங்கா என்ற உயர்ந்த படைப்பும் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும். தொல்காப்பியரின் 7 அடி உயர பீடத்தில் வெண்கலத்தாலான திருவுருவச் சிலைக்கு ஆண்டுதோறும் சித்திரை முழுமதி நாள் அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வணக்கம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில், இவ்வாண்டு சித்திரை முழுமதி நாள் 12.05.2025 திங்கள்கிழமையன்று காலை 9.45 மணியளவில் மலர்வணக்கம் நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மேயர், துணை மேயர், அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.


Are You Looking for

Experienced Attorneys?

Get a free initial consultation right now