Single Post
தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் (19.02.1855 – 28.04.1942) அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் பிப்பிரவரித் திங்கள் 19ஆம் நாளன்று தமிழ்த் தாத்தாவின் திருவுருவச் சிலைக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யப்பட்டு வருகிறது.
வான்புகழ் தமிழையும் வங்கக் கடற்காற்றையும் தமிழ் மூச்சுடன் உலகுக்கு உவந்தளித்த மகாமகோபாத்தியாய, மகாவித்துவான் உத்தமதானபுரம் வே. சாமிநாதையர் - டி.லிட் அவர்களின் 172ஆம் பிறந்தநாளான 2026 பிப்ரவரித் திங்கள் 19ஆம் நாளன்று (வியாழக்கிழமை) சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் எழுபத்து எட்டு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட திருவுருவச் சிலைக்கு காலை 9.15 மணிக்கு மலர்வணக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திராவிட வித்யாபூஷணம் உ.வே. சாமிநாதையர் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிராப்பள்ளி மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் ஐந்தாண்டுக் காலம் பயின்று தமிழறிஞராக மிளிர்ந்தார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த உ.வே.சா. அவர்கள், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் (1903 – 1919) பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
அழிந்து போகும் நிலையில் ஓலைச் சுவடிகளிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றையும் தேடித்தேடி, அச்சிட்டுப் பதிப்பித்தார். அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தார்.
90க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப் பதித்தது மட்டுமின்றி 3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரித்திருந்தார்.
பத்துப்பாட்டு, எட்டுத் தொகையில் ஐந்து நூல்கள், சீவகசிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய பழந்தமிழ் நூல்களையும் பல்வகை சிற்றிலக்கியங்களையும் பதிப்பித்தார்.
தாம் பதிப்பித்த ஒவ்வொரு நூலிலும் தம் புலமை மாட்சியை முன்னுரையில் தெளிவாகப் புலப்படுத்தினார்.
குறுந்தொகைக்கு உ.வே.சா. உரையெழுதிய பொழுது அவருக்கு வயது எண்பத்திரண்டு. நூறுப் பக்கத்தில் ஆராய்ச்சி முன்னுரை எழுதியிருப்பது பதிப்பிற்கு அணிகலனாகத் திகழ்கிறது.
உ.வே.சா. ஒரு பல்துறைக் களஞ்சியம், உரையாசிரியர், உரைநடை ஆசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், பேராசிரியர், பாடலாசிரியர், இசைக்கலைஞர் எனப்பல பாங்குகளில் தம் தலைமை மாட்சியை நிறுவியவர்.
செந்தமிழ்த் திலகமாய்த் திகழ்ந்த அவரின் நினைவு நீங்காது நிற்க அவர் மறைந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அவர் பணியாற்றி ஓய்வு பெற்ற சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தின் வாயிலில் அவரது தமிழ்ப்பணியைப் போற்றும் விதமாக 1948, மார்ச் 7 ஆம் நாளன்று உ.வே.சா. வின் உருவச்சிலை நிறுவப்பட்டது.
அதில் அவர் வாழ்நாளில் பெற்ற பாராட்டுகள் யாவும் குறிக்கப்பட்டதுடன் மகாகவி பாரதியாரின் வாழ்த்துப் பாடலின் இறுதி இரு வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளது.
உ.வே.சாமிநாதையரின் நினைவினைப் போற்றும் வகையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அரசு உயர் அலுவலர்களும், தமிழறிஞர்களும், பொதுமக்களும் மலர் வணக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கான முன்னெடுப்புகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது.

Are You Looking for
Experienced Attorneys?
Get a free initial consultation right now